Monday, July 15, 2019

ரொமான்டிசைஸ்கள்!

இந்த ரொமான்டிசைஸ்கள் மீது எனக்கொரு ஒவ்வாமை இருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேடஸ் களில் கூட, 'என்னை விட்டுசெல்லாதே என் அன்பே' 'பயப்பட வேணான்டி' பாடல்களை பாரக்கும்போது, **த்தா போய் தொலைங்கடா என்று திட்டவேண்டும் என தோன்றும். அப்படியிருக்கும் போது அவள் ஸ்டேடஸ் வைக்கும் போது மட்டும் நைஸ் சாங்க் என்று வழிந்துகொண்டு மெஸேஜ் அனுப்பித்தொலைவேன். அது சமரசமல்ல, சர்வமும் அவளுக்கென ஆகிவிட்டபின் மூளை மட்டும் பிடிவாதம் பிடிக்குமா என்ன... அவளுக்காக அப்படித்தான். எனக்கு பிடிக்காதது என்று எதுவும் இருக்கவாய்பில்லை உனது விருப்பமாய் அது இருக்கும் வரையில்... அவளுக்கு முன் சென்று இது எனக்கு பிடிக்கல மாத்து என்று அதிகாரத்தொனியுடன் பேசும் தைரியமெல்லாம் எனக்கு வாய்ததில்லை;சொல்லபோனால் வாய்க்கவும் வேண்டாம். அவளுக்கென என்னை மாற்றி கொள்வது எனக்கு விருப்பமானது தான். அவள் உலகத்திற்காக என்னை நானே உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். முழுமையாக உருவாக வேண்டும். சொதப்பிவிடக்கூடாது. இடையில் எப்போதாவது அவளிடம் வாய் தவறி கூட, 'உன்னுடைய இந்த செயல் எனக்கு பிடிக்கவில்லை' என்று சொல்லா வண்ணம் என்னை தகவமைத்துக் க்கொள்வேன். உப்பை மட்டுமே கொட்டி அவள் உப்புமா செய்தாலும் கூட!

Thursday, July 11, 2019

தேங்க்ஸ் எம்எஸ்டி

நேற்றிரவு எத்தனைபேருக்கு தூக்கம் வந்திருக்கும் என்று தெரியவில்லை. உலக கோப்பை கனவுகளுடன் வலம்வந்தவர்களுக்கு, நேற்றைய இந்திய அணியின் தோல்வி அத்தனை கனவுகளையும் கலைத்துப்போட்டியிருக்கும். இந்தியர்களுக்கு மற்ற விளையாட்டுகளை காட்டிலும், கிரிக்கெட் என்பது ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷல்தான்.அதை அவர்கள் கொண்டாடுகிறார்கள்; அதற்காக கண்ணீர் சிந்துகிறார்கள்; ஆர்பரிக்கிறார்கள்; சண்டைபோடுகிறார்கள். கிரிகெட்டுடனான எமோஷனல்  கனெக்ட் என்பது எப்போது அவர்களுடன் பின்னிபிணைந்திருக்கிறது.

எந்த அளவுக்கு தன் அணி வெற்றி பெற்றதை கொண்டாடுகிறார்களோ, அந்த அளவுக்கு தோல்வியையும் விமர்சிப்பதை அவர்கள் தவறுவதில்லை. சம்பந்தப்பட்ட அணி வீரர்களை திட்டித்தீர்ப்பார்கள். ஒருபடி மேலேசென்று அவர்களின் வீடுகளில் கல்வீசி தாக்குதல் நடத்துவதெல்லாம் கூட நடக்கும். ஆனால் நேற்றைய போட்டியில் அப்படி எதுவும் இல்லை. லீக் ஆட்டங்கள் கொடுத்த வெற்றியை சுமந்தபடி, அரையிறுதி ஆட்டத்தை எதிர்நோக்கியவர்கள், அதே வெற்றியுடன் இறுதி சுற்றுக்குள் நுழையலாம் என்று நம்பியிருந்தார்கள். அப்படிப்பட்டவர்களின் கனவுகள் நொறுக்கப்படும்போது, வெளிப்படும் அதிருப்தி மனநிலை, கோபம், ஆக்ரோஷம், வெறுப்பு, இவை எதுவும் நேற்றை போட்டி அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை.

ரோஹித், விராட் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, `ப்ச்’ என்று உச்சிக்கொட்டியவர்கள் இருந்தவர்கள், `தோனி இருக்கிறார்’ என்று அருகிலிருப்பவரை தேற்றிக்கொண்டிருந்தார்கள். 48 வது ஓவரில் தோனி அவுட்டாக அனிச்சையான ஒரு கோபம், ஏமாற்றம் ஏற்பட்டதே தவிர, அது தோல்வியைக்கடந்த பின்பு  நீடிக்கவில்லை. மாறாக அவர்கள், தேங்க்யூ தோனி #Thankyoudhoni  என்ற ஹேஷ்டேக்களுடன் நன்றி சொன்னார்களே தவிர, விமர்சிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அந்த ரன் அவுட்டை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

`ரன் அவுட் நாயகனுக்கே ரன் அவுட்டா’ என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. பழைய புகைப்படம் ஒன்றில் தோனி ரன்அவுட்டாவதையும், நேற்றைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது என்று வருத்தத்துடன் பதிவு செய்தனர். தோனி ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடந்துசெல்லும்போது, வருத்தப்படுவது போன்ற காட்சிகளை பதிவிட்டு, `யூ டன் எ லாட்’ என்று தோனியை அவர்கள் தேற்றுகின்றனர். தோனியின் ரன் அவுட்டின்போது, `அம்பயரின் ரியாக்ஷனை’ சுட்டிக்காட்டி தங்களை ஆறுதல்படுத்திக்கொள்கின்றனர். பெவிலியனில் ரோஹித் வருந்தும்காட்சிகள் அவர்களுக்குள் ஏதோ இனம்புரியாத வலியை ஊடுருவச்செய்கிறது.ரோஹித்தின் உலக கோப்பை ஆட்டத்தின் சென்சூரிக்களை வரிசைப்படுத்தி, `உங்களால் முடிந்ததை நீங்கள் செய்துவிட்டீர்கள் ரோஹித்’ என்று கண்ணீர் துடைக்கின்றனர்.

நேற்றைய ஆட்டத்தை தலைகிழாக மாற்றிய ஜடேஜாவை புகழ்கின்றனர். `பெஸ்ட் ரிவேஜ்’ என்று பாராட்டுகின்றனர். 1 ரன்னில் அவுட்டான கோலியை அவர்கள் திட்டவில்லை. ஏற்றுக்கொள்கின்றனர். `லவ் யூ தோனி’ என்பது தான் அவர்களின் அதிக பட்ச வாட்ஸ்அப் ஸ்டெஸூகளில் நிரம்பிக்கிடக்கும் எழுத்துகளாக இருக்கிறது. `அவரின் ரிட்டையர்மெண்டை ஏற்றுக்கொள்ள இங்கு யாரும் தயாராக இல்லை’. அவரது ரன் அவுட்டை வயதாகிவிட்டது என்று கொச்சைபடுத்தி விமர்சிப்பவர்கள் கூட இல்லை. `சொல்லப்போனால் அவர்களுக்கு அரையிறுதியில் தோற்றதைக்காட்டிலும், `தோனியின் ரிட்டையர்மெண்டும்; தோனி ரன் அவுட்டாகி நடந்துவரும்போது கலங்குவதுமான காட்சிகள்தான்’ வலியையும், வேதனையையும் தருகின்றன. அவர்களின் கடைசி வார்த்தை இதுவாக்கத்தான் இருக்கிறது #ThankyouMSD

Friday, September 28, 2018

தேவதைகள் சாத்தானை நினைப்பதில்லை

இதோ போதை தலைக்கேறி, அதை வெளியேற்ற வழியில்லாமல் இந்த இரவில் எதையோ கிறுக்கிக்கொண்டிருக்கிறேன். அந்த போதை அவளால் உண்டானதென்றால் உங்களால் நம்ப முடியுமா?

அப்பப்பட்டு கிடக்கும் கருப்பு சாயம் ஊற்றபட்ட இரவின் துகள்களிலிருந்து வெளியேறும் வாசம் தான், இந்த எழுத்துக்களின் அடிநாதம். அந்த வாசத்தின் இறுதி சொட்டுகளிலும் அவள் நிறைந்து கிடக்கின்றாள். 

குண்டுமணிப்போன்ற அதன் சிறிய வெற்றிடம், அவளது நினைவுகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.. உயிரின் ஒவ்வொரு முடிச்சுகளிலும், அவளது முகத்தின் ரேகைகள் பதிந்து கிடக்கின்றன. என் நியூரான் செல்களில் நீக்கமற நிறைந்து கிடக்கிறாள். வேறுவழியில்லை எனக்கு. அவளது நினைவை என் அனுமதியின்றி, எனக்குள் செதுக்கிக்கொண்டது எதுவோ? 

இப்படிப்பட்டதொரு இரவில், அடுக்குமாடியிலிருந்து தவறி விழுந்தவன் இடையில் பற்றிபிடித்திருக்கும் கயிறு போல, தூங்கச்சென்றவனை இழுத்து பிடித்து நிறுத்துகிறாள். 

இரவின் நீளங்களை அளந்துகொண்டிருக்கிறேன். இந்த இரவில் அவளது நினைவுகள் தான் என்னுள் மூழ்கி கிடக்கின்றன. அவள் நிச்சயம் தூக்கியிருப்பாள். அவளுக்கு நான் யார் என்பதுகூட தெரியாமலிருக்கலாம். அல்லது அவனது காதலன் அவளுக்கு வாங்கிக்கொடுத்த டெட்டிபியரின் தலையை கோதிக்கொண்டிருக்கலாம். 

இருந்துவிட்டு போகட்டும். எனக்கு இங்கு அப்படியில்லை. என்னை நினைப்பவர்கள் இல்லாமல் இருக்கக்கூடும். எனக்கு ஒரு பயம் உண்டு. அந்த அந்த கொலைகார கொசுக்களை பற்றித் தான். அவைகள் மோசமானவை. அவளை தீண்டக்கூடும். அது ஆபத்தானது. இதனால் அவளது தேகத்தில் மைக்ரான் அளவு துளை விழலாம். குறுதியை நாசக்கார கொசுக்கள் ருசித்துவிடலாம். அப்படி நடக்க கூடாது. 

ஒருமுறை முகத்தை பார்த்த எனக்கே அவளை மீண்டும் பார்க்கவேண்டும் என தோன்றும்போது, குருதியை ருசிபார்த்த கொசுக்கு மீண்டும் துளையிட தோன்றுவதில் ஆச்சரியமிருக்கப் போவதில்லை. இப்போது என்னால் என்ன செய்ய முடியும். இதோ பசியாற்றிக்கொண்டிருக்கும் அந்த மொபைலில் தான் அவளது போன் நம்பர் உள்ளது.

 கால் செய்து 'கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாய் இரு' என கூறிவிடவா? அவள் என்னை காறி உமிழக்கூடும். இந்த முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதுதான் சிறந்தது. எனக்கொரு நம்பிக்கையுள்ளது. கொசுக்கள் அவளை தீண்ட வாய்ப்பில்லை. அவளை பார்த்தே அவை சொக்கிகிடக்கும். அப்புறம் எங்கே தீண்டுவது?

அவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப யுகங்கள் தேவைப்படலாம்; அல்லது பழை நிலைக்கு திரும்பாமலே அதன் ஆயுள் முடிந்துவிடலாம்.  வலுக்கட்டயமாக இழுத்துச் சென்று வாங்கிதரும்படி அடம்பிடிக்கும் குழந்தையைப் போல, அவளைப்பற்றிய ஏதோ ஒன்றுதான் என்னை இதுவரை அழைத்து வந்து கொண்டிருக்கிறது. 

ஒருவரை நினைத்தால் அது அவர்களால் உணரமுடியும் என்று யாரோ எங்கோ சொன்னதை கேள்விப்பட்டிருக்கிறேன். 

இந்த இரவின் நாளங்களில் அவளது நினைப்பை அடைத்து அடைத்து ஒளித்து வைக்கிறேன். அவை, தூங்கிக்கொண்டிருக்கும், அவளது கனவுக்குள் புகுந்து என்னப்பற்றிய ஒரு பிம்பத்தை தோற்றுவித்தால் என்ன? எனக்கு ஏதோ ஒருவகையில் இந்த இரவு உதவி விடாதா?.

 இப்படியெல்லாம் நான் ஏங்க தேவையில்லை. நிச்சயம் இது ஒரு மூட நம்பிக்கையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. காரணம், தேவதைகள் ஒருபோதும் சாத்தான்களை நினைப்பதில்லை!

                                                                     

Monday, March 12, 2018

வரையறையற்ற வாழ்வு!


சென்னையை இருபெரும் துண்டுகளாய் கூறாய்வு செய்யலாம். அதன் ஒருபகுதியில் பணம்படைத்த மேல்தட்டு மக்களும், எதிர்பதத்தில் அடித்தட்டு மக்களும் இருப்பர். பணக்கார வர்க்கத்தினரின் வாழ்க்கை முறை  ஒரு கார் கண்ணாடியில் ஒட்டப்பட்ட கருப்பு கவரை போல,  காட்சிகள் யாவும் அகப்படாது. அவர்களது வாழ்க்கை முறையை கணிப்பது சிரமம்.  அதை ஒருபோதும் அவர்கள் அனுமதிப்பதும் கிடையாது. சாதாரணமாக வீடுகளுக்குள் நுழைவதே குதிரை கொம்பான காரியம். செக்யூரிட்டி செக் அப், ஆயிரம் கேள்விகள், ஆயிரத்தெட்டு பதில்கள், போதாக்குறைக்கு வாசலிலிருந்து வீட்டுக்குள்ளிருப்பவர்களுக்கு ஒரு ஃபோன்கால் என இப்படியாய் நீண்டுகொண்டே செல்லும் அந்த பாதுகாப்பு அம்சங்கள். இவை எதுவுமின்றி வெட்ட வெளியில் அமர்ந்துகொண்டு கதை பேசிகொண்டு, பரமபதம் விளையாடிக்கொண்டும் அன்றாட பொழுதை  கழிக்கிறது ஒரு கூட்டம். சொல்லப்போனால் வீடுகளுக்குள் அவர்கள் இருப்பதே கிடையாது. வாசற்படியே அவர்களது நிரந்தர வீடு. எதிர்வீட்டுகாரன், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களே இரத்த சொந்தம். இன்பம், துன்பம், கல்யாணம், பிறப்பு, கருமாரி, என அனைத்தையும் அவர்களுடன் பகிரந்துகொண்டு வாழ்கின்றனர். வெளியாட்கள் யாரும் அவர்களை நெருங்க முடியாது. அதிகார குரல்கள் அங்கு ஆட்டம் போட முடியாது. சின்னதாய் அதிகார மிரட்டல் தொனி வெளிப்பட்டாலே ஒன்று கூடும் கூட்டமது. முகம் தெரியாதவர்கள் கூட எளிதில் நெருங்கிவிடலாம். ஒழித்து வைப்பதற்கோ, மறைத்து பொய் சொல்வதற்கோ, நாளையின் தேவைக்காக சேர்த்து வைப்பதற்கென அவர்களிடம் ஒன்றுமில்லை. அன்றன்றைய தேவையை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு நாட்களை தள்ளிகொண்டுள்ளனர்.  5வயது  குழந்தை தனி அறையில் தனிமையில் தாழிட்டு தூங்கும் பரிணமிக்கப்பட்ட உலகில் அனாசயமாக  தெரு நாயோடு போர்வையை போர்த்தியபடி  உறங்குகின்றான் அந்த அடித்தட்டு சிறுவன்.  அவனுக்கு மனித இனம், விலங்கினம் என்ற பாகுபாடெல்லாம் தெரிய வாய்ப்பில்லை!

Sunday, March 11, 2018

இரவுக்காதலன்

நடுவிரவில் நெடுநேரம் உறங்காமல் விழித்திருக்கும் நபரை கண்டால் எனக்கு அறிமுகப்படுத்துங்கள். அவன் இரவுக்காதலன். என் தோழனாக இருக்க்கூடும். இரவுக்கென சில மானுடக்காதலர்கள் உண்டு. அவர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களுடைய இரவு மிக நீண்டது. அதில் யாரும் அவர்களை தொந்தரவு செய்யமுடியாது, எந்த இரைச்சலும் அவர்களை நெருங்க முடியாது. சுதந்திரமாக தனக்கு தோன்றியதை செய்ய துணிவார்கள். விடியும்வரை சிகரெட்டுடன், பழைய நினைவுகளையும் சேர்ந்து ஹெஷ் ட்ரேக்குள் போட்டு நசுக்கி கொண்டிருப்பர். ஆசையாய் வாங்கிய  மதுவை, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி குடித்தபடியே இசையில் மூழ்கி இரவை அனுபவிப்பர். பைக்கை பற்றிக்கொண்டே, சுற்றி திரிந்தவண்ணம் நான்கைந்து டிக்களை குடித்துகொண்டு இரவை ரசித்து பழகுவர். எழுதி எழுதி இரவு முழுவதையும் மையால் தீட்டிக்கொண்டிருப்பர். அந்த இரவுகள் எளிதில் கரையாது. ஏதோ ஒரு போதையின் வழியே பயணித்து கிடக்கும் ராட்சத கூட்டமது. தூக்கத்தை பற்றிய கவலை ஒருபோதும் அவர்களுக்கு இருந்ததில்லை. இரவை ருசிக்க, தடையாக இருக்கும் தூக்கம் அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. மலையளவு காட்சியளிக்கும் கற்கண்டொன்றை, கொஞ்சம் கொஞ்சமாய் ருசித்து கரைக்கும் எறும்பை போன்றவர்கள் இரவு காதலர்கள். இரவு பணியில் உள்ள கூட்டம் இதில் சேரா. அவர்கள் பணி நிமித்தமாய், விழிக்க பணிக்கப்பட்டவர்கள். ஆசையோடும், வாஞ்சையோடும் இரவை வாசிக்கும் கூட்டம் அவர்களிடமிருந்து விலகியபடியே நிற்கும், வற்புறுத்தலுக்கோ, கரிசனத்திற்கோ, அங்கு இடமில்லை.

Monday, February 26, 2018

சற்றே தள்ளி நின்று கொ(ல்) ளுங்கள்!

ஆம், உணவுக்காக யாரெனும் அடித்துகொள்ளப்பட்டால்   தள்ளிநின்றுகொ(ல்)ளுங்கள்.

உரிமைக்கான போராட்டத்தை யாரேனும் உங்களுக்கும் சேர்த்து முன்னெடுத்தால்  தள்ளி நின்று கொ(ல்)ளுங்கள்.

குருதியோட இனப்படுகொலைகள் நடந்தால் தள்ளி நின்றுகொ(ல்)ளுங்கள்.

உங்கள் அருகில் அமர்ந்திருப்பவன் நெற்றியில் அதிகாரவர்க்கத்தின் தோட்டாபாய்ந்தால்  தள்ளி நின்று கொ(ல்)ளுங்கள்.

அடிப்படை உரிமைகள் இழந்து நிர்வாணமாய் கிடக்கும் சூழலில், சித்ரவதைக்காட்பட்டு உரிமைகளை மீட்கும் போராட்டம் நடந்தால் சற்றே தள்ளி நின்றுகொ(ல்) ளுங்கள்.

யாரோ ஒருவன் தேவையில்லாமல் போராடுகின்றான் என்று உரைத்தப்படியே தள்ளி நின்றிடுங்கள்..

Tuesday, February 13, 2018

சென்னையின் இரவு

தொலைதூரத்திலிருந்தபடி ஒலிக்கிறது அந்த மணிச்சத்தம். தன் மீதான பொருளாதாரசுமையை சுமந்தபடியே குல்பி வண்டியை தள்ளிக்கொண்டு வந்தார் அந்த நபர். மூப்பதிற்கும் அதிகமான வயதுடையவர். அருகில் வந்தபடியே, குல்பி வேண்டுமா என்று கேட்டார். சற்று நேரத்திற்கு முன்பு தான் எங்களை கடந்து சென்றது ஒரு குல்பி வண்டி, ஆனால் அவரிடம் வேண்டாம் என்ற கூறிய எங்களுக்கு இவரிடம் அவ்வாறு கூற தோன்றவில்லை. அவர்கடந்து சென்ற சில மணி நேரத்தில் டீ,  மோர் என பலரும் எங்களை கடந்தனர். ஆம்! கண்டதையும் தின்று தான் இருளை செரிக்கிறது சென்னை. அவற்றின் ஒவ்வொரு மூலையிலும் எதோ ஒரு வியாபாரி இருந்துகொண்டே தான் இருக்கிறான். அவர் கைகளில் எதாவது ஒரு திண்பண்டபம் தீராமல் மிச்சமிருந்து கொண்டே தானிருக்கிறது.  அவர்களுக்கான வாழ்க்கைமுறை என்பது நம்மிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. தங்கள் வியாபாரத்திற்கான அனைத்தையும் மதியத்திலிருந்தோ அல்லது மாலையிலிருந்தோ தயாரித்து, இரவு விற்பனைக்கு ஆயத்தமாகின்றனர். இரவை கண்டோ, அதில் பணத்தை தேடி அலையும் காவல்துறை ஓநாய்களை கண்டோ உழைக்கும் மக்களுக்கு ஒருபோதும் பயமிருந்ததில்லை. அதை எதிர்நோக்கியே அவர்கள் தினம்தினம் பயணித்து கொண்டிருக்கின்றன.  அவர்களுக்கான உலகம் இருட்டு மட்டுமே. சென்னையை பாதுகாக்கும் இரவு காவர்கள் அவர்கள். கோடைகாலத்தில் பெய்யும் மழையை போல, இருளுக்குள் அமர்ந்துகொண்டு வாடிக்கையாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். உழைக்கும் மக்களுக்கான இரவு என்றும் ஒளி நிறைந்தது.